அறிமுகம்:-

  கண்நீர் அழுத்த நோய் என்பது பொதுவான ஒரு கண் நோய். இந்த நோயினால் கண்களில் திரவம் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் கண்களின் உள்ளே திரவ அழுத்தம் அதிகரிக்கிறது.இதன் காரணமாக பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பக்கவாட்டில் கண் பார்வை இழப்பு ஏற்படலாம்.


அறிகுறிகள்:-

   

1. கண்ணில் வலி அல்லது சிவத்தல்.
2. கண்பார்வை மங்குதல்
3. ஒளியைச்  சுற்றி ஒளிவட்டங்கள்
4. கண்பார்வை குறுகிவிடுதல் (டன்னெல் விஷன்)
5. கண்களில் நீர்வடிதல்.

குழந்தைப்பருவ கண் நீர் அழுத்தம்:

    பிறந்த குழந்தைகளுக்குக்கூட கண் நீர் அழுத்தம் ஏற்படலாம். கண்புரை நோய் காரணமாக குழந்தைப் பருவத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு கண் நீர் அழுத்தம் ஏற்படலாம்.

   பொதுவான சில அறிகுறிகள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தைப்பருவ கண் நீர் அழுத்தம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

  

1. பெரிதாக உள்ள கருவிழி
2. கண்களில் அதிகமாக நீர் வெளியேறுதல்
3. குழந்தைகள், ஒளியைப் பார்க்காமல் தவிர்த்தல்.
 இந்த அறிகுறிகள் இருந்தால் கண் நீர் அழுத்தமாகத் தான் இருக்கும் என பயப்படத் தேவையில்லை. மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்துகின்றன.
பெரிய குழந்தைகளுக்கு இது போல அறிகுறிகள் எதுவும் இருக்காது.


கண்நீர் அழுத்த நோய் எப்படி நீங்கள் அறிவது?


காரணங்கள்:-


• முதுமை - வயதானவர்களுக்கு கண்நீர் அழுத்த   நோய்   ஏற்பட    அதிக    வாய்ப்புண்டு.

சில மருந்துகள்:


கார்ட்டிகோஸ்டீராய்டு (Steroid) பயன்படுத்துதல். ஸ்டீராய்டுகள் தொடர்ந்து பயன்படுத்தும் ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு கண்நீர் நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

 

கிட்டப் பார்வை.
• தூரப் பார்வை .
• முன்னர் கண்ணில் ஏற்பட்ட காயம்.
• நீரிழிவு – நீரிழிவுள்ளவர்களுக்கு கண்நீர் அழுத்த நோய்  ஏற்படும் அபாயம் அதிகம்.

கண்நீர் நோய் குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் : உங்கள் குடும்பத்தின் பெரியவர்கள் யாரேனும் கண்நீர் அழுத்த நோய் அவதிப்படுகிறார்கள் எனில் உங்களுக்கும் அது ஏற்பட அதிக சாத்தியம் உண்டு.



• கண்ணிற்குள் அழுத்தம் அதிகரித்தல் .
• அதிக  இரத்த அழுத்தம்   –   அதிக இரத்த அழுத்தம் கண்நீர் நோய் அபாயத்தைஅதிகரிக்கிறது.


கண்நீர் அழுத்த நோய் உண்டா என்பதை  கண்டுபிடிக்க சியாட்ஸ்(schiots Tonometer), காற்று அழுத்த கருவி (Non contact Tonometer), அப்ளனேஷன் (Applanation Tonometer) கருவிகளை உபயோகிக்கலாம். நரம்புகளில் உள்ள நுண்ணிய மாற்றங்களை கண்டறிய ஸ்கேன் (Visual field), ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி  (OCT) என்ற பரிசோதனை உள்ளது.


கண்டு பிடிப்பது எப்படி?


1. சியாட்ஸ் (Schiotz Tonometer) கருவி :


இன்றும்  நடைமுறையில் உள்ளது.
 

2. காற்று அழுத்த கருவி (Non Contact Tonometer):


காற்றழுத்த கோட்பாட்டில் வேலை செய்யும் மின்னணு கருவி.

   

3.அப்ளனேஷன் கருவி(Applanation Tonometer) :


புதிய நவீன முறை
  

சிகிச்சை 


1. சொட்டு மருந்து
2. லேசர் சிகிச்சை
3. அறுவை சிகிச்சை
1. சொட்டு மருந்து:



கண்களில் சுரக்கும் திரவத்தை குறைத்து கண் அழுத்தத்தை சொட்டு மருந்துகள் குறைக்கின்றன. அல்லது கண்களிலிருந்து திரவம் வெளியேறும் துளைகளை மேம்படுத்துகின்றன.

2.லேசர் சிகிச்சை:-

   
கண்நீர் அழுத்த நோய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் குறுகிய கோண கண்நீர் அழுத்த நோய் ஒருவகை. இவர்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.இதற்கு YAG LASER  iridotomy (லேசர் ஐரிடோடோமி)என்று பெயர். லேசர் சிகிச்சையின் போது வலி தெரியாமலிருக்க சிகிச்சைக்கு முன் சொட்டு மருந்து போடப்படும். கண்நீர் அழுத்தம் தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு கண் அழுத்தத்தைக் குறைக்கவும் நோயாளியின் வலியைக் குறைக்கவும்  இது உதவும். சில நேரங்களில் கிரையோ (cryo)சிகிச்சை தேவைப்படலாம். லேசர் சிகிச்சை மூலம் கண்ணிலிருந்து திரவம் வெளியேறும் பாதை அடைப்பட்டிருந்தால் அதைத் திறப்பதற்கோ திரவம் வெளியேற புதிய பாதை உருவாக்குவதற்கோ  பயன்படுத்துதல் .

1.லேசர் சிகிச்சை என்றால் என்ன?

கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க, கண்களுக்குள் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களை செலுத்தும் சிகிச்சையே லேசர்.

2.லேசர் சிகிச்சை செய்யப்படுவதன் நோக்கம் என்ன?

கண்ணிலிருந்து திரவம் வெளியேறும் பாதை அடைப்படிருந்தால் அதைத் திறப்பதற்கோ திரவம் வெளியேற புதிய பாதையை உருவாக்குவதற்கோ லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது.

3.லேசர் சிகிச்சை செய்துகொண்டால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பாதிப்பு எதுவும் ஏற்படாது. லேசர் சிகிச்சை செய்தபிறகு சிறிது நேரத்திற்கு ஒளியைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கு லேசான தலைவலி ஏற்படலாம்.

4. லேசர்  சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால் என்ன நடக்கும்?

மருத்துவர் உங்களுக்கு லேசர் சிகிச்சையைப் பரிந்துரைத்திருந்தால் காலம் தாழ்த்தாமல் செய்து கொள்ளவும். இல்லையெனில் கண் அழுத்தம் அதிகரிக்கும், பார்வை முழுவதும் பாதிக்கப்படும்.

5.லேசர் சிகிச்சையை மீண்டும் தொடர வேண்டுமா?

ஆம். சில நோயாளிகளுக்கு ஒருமுறைக்கு மேல் லேசர் செய்யப்படும். திரவம் வெளியேறுவது இயல்பு நிலைக்கு மாறும்வரை லேசரைத் தொடர வேண்டும். அதனை மருத்துவர் கண்களைப் பரிசோதித்த பின்னர் தெரிவிப்பார்.

6.இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் லேசர் சிகிச்சையை செய்ய முடியுமா?

ஒரே அமர்வில் (same sitting) அடுத்தடுத்து லேசர் சிகிச்சை செய்யப்படும்.

7.லேசர் சிகிச்சைக்கு முன் கண்களில் ஏன் சொட்டு மருந்து போடப்படுகிறது?

லேசர் சிகிச்சைக்கு கண்களில் உள்ள பாவையைச் சிறிதாக்க வேண்டும். இதற்குதான் லேசருக்கு முன்னதாக சொட்டு மருந்து செலுத்தப்படுகிறது.

8.லேசர் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்க வேண்டுமா?

தேவையில்லை. இந்த லேசர் சிகிச்சையானது வெளிநோயாளிகள் பிரிவிலேயே செய்யப்படும்.

9.லேசருக்கு பிறகு தலை குளிக்கலாமா?

இது, அறுவை சிகிச்சை அல்ல. எனவே, தலை குளிப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

3. அறுவை சிகிச்சை:-

1. கண்நீர் அழுத்தம் மிகத் தீவிரமாக பாதித்துள்ள நோயாளிகளுக்கு .
2. கண்நீர் அழுத்தம் கண்புரையும் பாதித்துள்ள நோயாளிகளுக்கு.
3. மருந்துகளால் எந்த பலனும் ஏற்படாத நோயாளிகள் .

மேலே குறிப்பிட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம்.



கண் நீர் அழுத்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சொட்டுமருந்துகளைப் பயன்படுத்தலாமா?

மருத்துவர் பரிந்துரைக்கின்ற மருந்துகளை மட்டும் பயன்படுத்தவும். ஒவ்வொரு பரிசோதனையின் போதும் உபயோகிக்க வேண்டிய மருந்துகளை தெளிவாக கேட்டு பயன்படுத்தவும்.

அறுவை சிகிச்சையால் இழந்த பார்வையை மீட்க முடியுமா?

முடியாது. கண் நீர் அழுத்தத்தால் இழந்த பார்வையை மீட்க முடியாது. மேற்கொண்டு பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கவே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க (bedrest) வேண்டும்?

பொதுவாக, அறுவை சிகிச்சைக்கு பிறகு 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா?

அறுவை சிகிச்சையின்போது தையல் போடப்படும். இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். எனினும், இந்தத் தையல்கள் சில நாட்களில் அகற்றப்படும். பிறகு, எரிச்சல் இருக்காது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை முறை மறுபரிசோதனைக்கு வரவேண்டும்?

தையலை அகற்றவும், தேவைப்பட்டால் கண்களில் மருந்து செலுத்தவும் மூன்று மாதங்களில் குறைந்தது 4-6 முறை மறுபரிசோதனைக்கு வரவேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்களில் வாகனம் ஓட்டலாம்?

ஒருமாதத்திற்கு பிறகு, மருத்துவர் உங்கள் கண்களின் நிலையைப் பரிசோதித்த பிறகு வாகனம் ஓட்டலாம்.

பக்க விளைவுகள்:

  

➰கண்களில் எரிச்சல்
➰வீக்கம்
➰அரிப்புபோன்றவை ஏற்படும். 
➰வெகு சிலருக்கு இதயத்துடிப்பு
➰இயல்பைவிட அதிகமாக இருக்கும்


தடுக்க என்ன வழி?

 கண் நீர்அழுத்த நோய்க்கு ‘ஓசையின்றிப் பார்வையைத் திருடும் நோய்’என்று ஒரு பெயரும் இருக்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும். பொதுவாகவே 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொண்டால் இந்த நோய் இருப்பது தெரிந்துவிடும்.

    நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி யாருக்காவது கண் நீர்அழுத்த நோய் இருந்தால் , குடும்பத்தில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு இரண்டு முறை கண் நீர்அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1.கண் நீர் அழுத்தம், பரம்பரை நோயா?

ஆம். கண் நீர் அழுத்தத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களது குடும்பத்தினரும் குறிப்பாக இரத்த உறவு உள்ளவர்கள் கண்டிப்பாக விரிவான கண் நீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

2. எனது கருவிழியை ஏன் பரிசோதனை செய்ய வேண்டும்?

கருவிழி தடிமனாக இருந்தால்கூட கண்களில் உள்ள இயல்பான அழுத்தம் பாதிக்கப்படும். இதனால் சில மருத்துவர்கள் கருவிழியைப் பரிசோதிக்கின்றனர்.

3. உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்திற்கும் கண் அழுத்தத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கண்களில் அழுத்தம் அதிகளவில் இருக்கும் என்பதில்லை. ஆனால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கண் நீர் அழுத்தம் உண்டாகும் அபாயம் அதிகம் உள்ளது.

4. கண் நீர் அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எனது உணவுமுறையில் கட்டுப்பாடோ மாற்றமோ வேண்டுமா?

கண் நீர் அழுத்தத்திற்கும் உணவுமுறைக்கும் நேரடி தொடர்பு இல்லை.

5.கண் அழுத்தத்தின் இயல்பான அளவு என்ன?

12.2 – 20.6 mm Hg

6. கண் அழுத்தத்ததைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை கண்களைப் பரிசோதனை செய்வது மிக அவசியம்.






Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps